ASAL film latest news

அசல் தொடர்பான தமிழ் செய்திகள், வீடியோ, படங்கள்.






டைரக்டர் சரண் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம் அசல். சிவாஜி புரொடக்ஷன் சார்பில் நடிகர் பிரபு தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார்? என இன்னமும் முடிவாகவில்லை. படத்தின் தொடக்கவிழா பூஜை இன்று (8ம்தேதி) சென்னை தி.நகர் செவாலியே சிவாஜிகணேசன் சாலையில் உள்ள அன்னை இல்லத்தில் பிரமாண்டமாக நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் சவுந்தர்யாவுடன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசுகையில், என் மகளுடன் எந்த சினிமா விழாவுக்கும் சென்றதில்லை. முதன் முதலாக சவுந்தர்யாவுடன் இணைந்து அன்னை இல்லத்திற்கு இந்த பூஜைக்கு வரவேண்டும் என்று வந்தேன். அவ்வளவு ராசியான வீடு இது. இந்த வீட்டில் இருந்துதானே சிவாஜி சார், வீரபாண்டிய கட்டபொம்மன், பாலும் பழமும், திருவிளையாடல் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புக்கு கிளம்பி சென்றார் என்று நினைக்கும்போதே, பூஜை போடப்படும் அசல் படம் எத்தனை வெற்றி பெறும் என்பது தெரிகிறது. இங்குதான் சந்திரமுகி படத்துக்கும் பூஜை போட்டோம். ஆனால் ரொம்ப சிம்பிளாக பூஜை போடப்பட்டு, அது வெற்றி கண்டது. இன்று அஜித்தின் அசல் இவ்வளவு பிரமாண்டமாக பூஜை போடப்பட்டுள்ளது. அதன் வெற்றி சந்திரமுகியை விட பெரிதாக இருக்க வாழ்த்துகிறேன், என்றார்.

நடிகர் பிரபு பேசுகையில், பில்லா படத்தில் இணைந்து நடிக்கும்போது தம்பி அஜித்திடம் சிவாஜி புரொடக்ஷனுக்கு ஒரு படம் பண்ணணும்னு கேட்டேன். தம்பி சரின்னு ஒத்துக்கிச்சு. இதோ.. டைரக்டர் சரண் இயக்கத்தில் அசல் படத்தை ஆரம்பிச்சிட்டோம். அசல் பட கதைக்காகவோ, கால்ஷீட்டுக்காகவோ ஒரு நாளும் அஜித்தை சூட்டிங் ஸ்பாட்டிலோ, வீட்டிலோ போய் நான் பார்க்கவில்லை. நான் வருகிறேன் என்றபோது வரே சிவாஜி சார் வீட்டில் வந்து நான் கதை கேட்கிறேன் என்று அன்னை இல்லம் வந்தார். எல்லோரும் விரும்பியதாலும், அப்பாவும்- அம்மாவும் கூடவே இருக்கிற மாதிரி உணர்வு இருக்கிறதாலும் நானும், அண்ணன் ராம்குமாரும் முடிவு செய்து அசல் பூஜையை இங்கேயே வைத்து விட்டோம். இயக்குனர் சரண், அஜித், இசையமைப்பாளர் பரத்வாஜ், கவிஞர் வைரமுத்து, யூகி சேது, கேமராமேன் பிரசாந்த், எடிட்டர் ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் எம்.பிரபாகரன் என்று வெற்றி கூட்டணி அமைந்திருக்கும் இந்த படத்தின் டைட்டிலுக்கு மேல், அஜித்பெயருக்கு மேல் சிவாஜி புரொடக்ஷன் பிரபு வழங்கும் அவரே போட்டுக் கொள்ளச் சொன்னதால்தான் என் பெயரை அஜித் பெயருக்கு மேல் போட்டுக் கொண்டேன். இதற்காக இங்கு குழுமியிருக்கும் அஜித் ரசிகர்கள் என் மீது கோபம் கொள்ளக் கூடாது என கிண்டலாகபேசிய பிரபு, இந்த படத்தில் டைரக்டர் சரணும், அஜித்தும் விரும்பினால் நானும் ஏதாவது ஒரு ரோலில் நடிப்பேன் என்று விளையாட்டாகவும் பேசினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து, ஏவி.எம்.சரவணன், நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, கார்த்தி, இயக்குனர்கள் கே.பாலசந்தர், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், ஜெயம் ராஜா, எடிட்டர் மோகன், ஷாலினி அஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அசல் பட பூஜைக்கு அஜித் வந்திருக்கும் தகவல் கிடைத்த ஏராளமான ரசிகர்கள் அன்னை இல்லம் பகுதியில் திரண்டதால், அங்கு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை டிராபிக்ஜாம் ஏற்பட்டது.

0 விமர்சனம்:

Post a Comment